களத்தில் மோதும் 950 வேட்பாளர்கள்.. வாக்களிக்கப்போகும் 6.23 கோடி வாக்காளர்கள்.. எல்லாம் தயார்.. சத்ய பிரதா சாகு

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாகவும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Apr 18, 2024 - 15:13
களத்தில் மோதும் 950 வேட்பாளர்கள்.. வாக்களிக்கப்போகும்  6.23 கோடி வாக்காளர்கள்.. எல்லாம் தயார்.. சத்ய பிரதா சாகு

18வது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளைய தினம் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதா சாகு, 39 தொகுதிகளிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 

தமிழ்நாடு முழுவதும்  6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். 10.92 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை ஆறு மணிக்கு முன்பாக வந்து வரிசையில் நிற்பவருக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 3.32 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  39 பொது பார்வையாளர்கள் 20 காவல் பார்வையாளர்கள் 58 செலவின பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ரூ. 173 கோடி ரொக்கம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. 1080 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பல்வேறு ஆபரணங்கள் பறிமுதல்.  தேர்தல் முடிந்த பிறகு 15 கம்பெனி துணை இராணுவ படையினர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 8050 பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் 183 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது
வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்

மாநில காவல்துறையைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை தமிழகத்தில் மொத்தம்  1,58,568 வாக்குபதிவு எந்திரங்களும் 81,157 கட்டுபாட்டு எந்திரங்களும் 8,685 VVPAT இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow