கூட்டணிக்கு சிக்னல்; பிறந்தநாளுக்கு வாழ்த்து - விஜய்க்கு வலை விரிக்கும் அரசியல் பிரபலங்கள்!
கள்ளச்சாராய விவகாரத்தில் 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த சோக நிகழ்வு காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் அறிவித்திருந்தார்.
நடிகர் விஜய்யின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சினிமா துறையினர் மட்டுமல்லாது, அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிகழ்வு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்டாக GOAT படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
மிகப்பெரிய மல்டி ஸ்டார்ஸ் ப்ராஜெக்ட்டாக உருவாகி வரும் கோட் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனை இன்னும் எகிற வைக்கும் விதமாக கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், விஜய் இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய விவகாரத்தில் 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த சோக நிகழ்வு காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் அறிவித்திருந்தார். ஆனாலும், தமிழகம் முழுவதிலும் விஜய் ரசிகர்கள் தங்களது ஆஸ்தான நாயகனின் பிறந்தநாளை உற்சாக கொண்டாடி வருகின்றனர்.
அவருக்கு கமல்ஹாசன், பிரபுதேவா, இயக்குநர்கள் வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், எப்போதும் இல்லாத அளவிற்கு, எதிர்பாராதவிதமாக அரசியல் பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது வாழ்த்துச் செய்தியில், “ஆளும் அரசின் விழாக்களுக்கு செல்வது மட்டும் திரைத்துறையின் பணியல்ல! மக்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் குரலை அரசியல் என்று விடுவார்கள். திரைத்துறையினரும் குரல் கொடுத்தால் அரசால் திசை திருப்ப இயலாது!
மக்கள் படும் துயரங்களை கண்டு மற்றவர்களை போன்று தூரம் செல்லாமல் குரல் கொடுத்து நேரிலும் சென்று ஆறுதல் தெரிவித்த தம்பி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! திரைப்பணியோடு நின்று விடாமல் மக்கள் பணியிலும் ஈடுபடவுள்ளது வரவேற்கத்தக்கது!” என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “இன்று பிறந்தநாள் காணும் அன்பு இளவல் - தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் விஜய் அவர்களுக்கு எமது இனிய வாழ்த்துகள். நலமொடு வளமொடு நீடு வாழ்க!” என்று விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ”பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுப் பணியில் காலூன்றி உள்ள திரு. விஜய் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான சகோதரர் விஜய்க்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாக, சமூகப் பொறுப்புடன் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்திருக்கும் சகோதரர் விஜய் அவர்களின் கலை மற்றும் அரசியல் பணிகள், இனிதே சிறப்புற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ள வாழ்த்துக் குறிப்பில், “தமிழ்த் திரையுலக முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய்க்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் விஜய் பூரண உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றையும் தாண்டி உட்சபட்சமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருத்தகை நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளது.
அதில், “இளைய தளபதி என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் 50-வது பிறந்தநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அவரை மனதார வாழ்த்துகிறேன்.
கலைத்துறையின் மூலம் தமிழக மக்களின் குறிப்பாக, இளைஞர்களின் அன்பையும், பேராதரவையும் பெற்று வருகிற அவர் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்று, பொது வாழ்க்கையில் மேலும் சேவைகளை தொடர்ந்து செய்திட வாழ்த்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அரசியல் பிரமுகர்களும், அரசியல் கட்சியினருக்கு சினிமா துறையில் உள்ளவர்கள் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வது என்பது இயல்பான ஒன்றுதான் என்ற போதிலும், நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி, தேர்தல் ஆணையத்தால் முறைப்படி அங்கீகரிக்கப் பட்ட பிறகு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து இருப்பது அரசியல் களத்தில் பலரது புருவத்தை உயர்த்த செய்துள்ளது.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வலை விரிப்பதற்காகவே விழுந்து, விழுந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், விதிவிலக்காக திமுகவில் உள்ள முக்கிய பிரபலங்கள் யாரும், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது ஆச்சர்யமான உண்மை. இத்தனைக்கும், அமைச்சர் உதயநிதி, விஜய்யின் குருவி திரைப்படத்தின் மூலமே திரைப்பட விநியோகஸ்தராக உருவெடுத்தது, திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
What's Your Reaction?