காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் தேர்தல்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை காளிகாம்பாள் கோவில் அறங்காவலர்கள் தேர்தலை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

Jun 22, 2024 - 17:08
காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் தேர்தல்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை பாரிமுனை தம்புசெட்டி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது.இந்த கோயில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்பே, தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தில் அமைந்திருந்தது. ஆங்கிலேயர் கிழங்கிந்திய கம்பெனி ஆட்சி அமைந்தப்பின், தற்போதுள்ள கோட்டை கட்டிமுடித்தபின், இந்த கோயில் கோட்டை வளாகத்தின் உள்ளே இருந்ததால் ஆங்கிலேயர்கள், இக்கோயிலை தம்பு செட்டி தெருவில் இடம் ஒதுக்கி புதிய கோயிலை கட்ட, அக்கோயில்லை பாத்தியபட்ட விஸ்வகர்மர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 1639-ல் இக்கோயிலை தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. 1677-ல் சத்ரபதி சிவாஜி இக்கோயிலில் ரகசியமாக வழிபட்டு சென்றுள்ளார். இந்த கோவில் பல ஆண்டுகளாக தனியார் வசம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கோவில் நிர்வாக சீரமைப்பு காரணமாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கோவிலுக்கு புதிய தக்காரையும் அறநிலையத்துறை நியமனம் செய்தது. 

 காளிகாம்பாள் கோவில் அறங்காவலர்கள் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, தேவஸ்தான உறுப்பினர் ஜெயராஜகோபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் முறையாக நடந்துள்ளதால், அதனை ரத்து செய்யும்படி கோர முடியாது என கோவில் அறங்காவலர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அரசுத்தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்கனவே தேர்தல் முடிந்து, அறங்காவலர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், தேர்தலை ரத்து செய்ய முடியாது எனவும், அறநிலையத் துறை சட்டப்படி, அறங்காவலர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் முறையிட வேண்டும் என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow