அமெரிக்க விபத்து - கப்பலில் இருந்த இந்தியப் பணியாளர்களை இழிவுபடுத்தும் இனவெறி கார்ட்டூன் வைரல்..
அமெரிக்க பால விபத்து தொடர்பாக கப்பலில் இந்தியர்கள் செய்வதறியாது திகைக்கும் வகையிலான இனவெறி கார்ட்டூன் இணையத்தில் வைரலாகும் நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவின் பால்டிமோர் நகர துறைமுகத்தின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் பிரான்சிஸ் ஸ்காட் கீ என்ற பாலம், 1977ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த பாலத்தை 22 இந்தியப் பணியாளர்கள் கொண்ட சரக்குக் கப்பல், கடந்த 26ம் தேதி கடக்க முயற்சித்தது. நள்ளிரவில் திடீரென மின்னணு சாதனங்கள் செயலிழந்த நிலையில், சிக்கலை சரிசெய்து மீண்டும் கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. எந்த வழியும் தெரியாத நிலையில், பாலத்தின் போக்குவரத்தை நிறுத்துமாறு இந்திய அதிகாரிகள் மேரிலாந்து போக்குவரத்து ஆணையரகத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், அடுத்த 2 நிமிடங்களில் கப்பல் மோதி பாலம் நொறுங்கி ஆற்றில் விழுந்தது. இருப்பினும் பாலத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 பேர் மாயமான நிலையில், இருவர் உடல் மட்டும் மீட்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் foxford comics என்ற தளம், கப்பலில் பயணித்த இந்தியர்களின் வெப்காமிக் கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.
https://twitter.com/FoxfordComics/status/1772715802766008692
அரை நிர்வாணத்துடன் கீழ்த்தரமாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் வகையில் இந்தியர்கள் இருப்பது போன்ற இந்த காமிக் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியர்களை இனவெறியாக தாக்கும் வகையில் மட்டுமின்றி, கப்பல் பணியாளர்களை குறைமதிப்பிற்கு இது உட்படுத்துவதாகவும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கப்பல் விபத்து பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்திய போதும், கடைசி நேர அழைப்பின் மூலம் பல உயிர்களை காத்த இந்திய கப்பல் குழுவினரை மேரிலாண்ட் ஆளுநர் ஹீரோக்கள் என அழைத்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?