நிபந்தனையற்ற மன்னிப்பு கேளுங்கள்.. ஏ.வி. ராஜு-வுக்கு 24 மணிநேரம் கெடு விதித்த திரிஷா..

Feb 22, 2024 - 13:40
நிபந்தனையற்ற மன்னிப்பு கேளுங்கள்.. ஏ.வி. ராஜு-வுக்கு 24 மணிநேரம் கெடு விதித்த திரிஷா..

கூவாத்தூர் விவகாரத்தில் தம்மை தொடர்பு படுத்தி பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு 24 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென நடிகை திரிஷா கெடு விதித்திருக்கிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜு, சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், கூவத்தூர் விவகாரத்தில் நடிகை திரிஷாவை தொடர்பு படுத்தி பேசி இருந்தார். சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய இந்த வீடியோவை கண்டு, திரைத்துறையினர் உள்பட பல்வேறு துறையினரும் கண்டனம் தெரிவித்தனர்.

நடிகை திரிஷாவும் தமது எக்ஸ் தள பதிவில், கண்டனம் தெரிவித்தார். அதில், கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.

இதனால் பதறிப்போன ஏ.வி.ராஜு, தமது பேச்சு தொலைக்காட்சிகளில் தவறாக ஒளிபரப்பப்பட்டுள்ளதாக பல்டியடித்தார். என் கருத்தால் மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்பதாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். 

இந்த நிலையில், ஏ.வி.ராஜுக்கு நடிகை திரிஷா வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திரிஷா அனுப்பிய வக்கில் நோட்டீஸில்,  "தன்னை பற்றி அவதூறு பேச்சுக்கு 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow