“என் தற்கொலைக்கு நீதிபதிதான் காரணம்” எழுதி வைத்துவிட்டு ஊழியர் விபரீத முடிவு
தற்கொலைக்கு முயன்ற பணியாளருக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்னுடைய தற்கொலைக்கு நீதிபதிதான் காரணம் என்று கடிதத்தில் பெரிய குண்டைப் போட்டுவிட்டு, விஷம் குடித்திருக்கிறார் அரவக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் பணி செய்யும் ஊழியர் ஒருவர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்...
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் கரூர் மாவட்டம் அறவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசர் பணியில் இருந்து வந்தார். அவர் கடந்த 25-ம் தேதி நீதிமன்ற வளாகத்தில் திடீரென விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அவர் எழுதியதாக ஒரு கடிதமும் இருந்துள்ளது. அதில்தான், தன் தற்கொலைக்கு அந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிதான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது.
அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் பணிக்குச் சேர்ந்துள்ளார். அப்போதிலிருந்தே அவரது மருத்துவ விடுப்புகள் உட்பட அனைத்து விடுப்பு கோரிக்கைகளையும் நிராகரித்துள்ளார் அந்த நீதிபதி. ஆனால், உடல்நிலை சரி இல்லாததால் அவர் விடுப்பு எடுத்துள்ளார். அதன் பின் அவர் பணிக்குச் சேர்ந்ததில் இருந்து அவருக்கு சம்பளம் வராதபடி அந்த நீதிபதி நிறுத்தி வைத்துவிட்டார் என்றும் நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் லாலாபேட்டையில் இருந்து அரவக்குறிச்சிக்கு வந்து போகக் கூட பணம் இன்றி தவித்ததாகவும், தன் குடும்பத்தைக் கவனிக்கக் கூட பணமில்லாமல் அவதிப்பட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, விஷத்தை அருந்தியுள்ளார். இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அரவக்குறிச்சி, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட பணியாளருக்கு நியாயம் வழங்கி உதவிட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
நீதி வழங்கும் இடத்தில் இருக்கும் நீதிபதியே குற்றம் சாட்டி, ஊழியர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் அருந்திய சம்பவம் அரவக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
What's Your Reaction?