பாட்டி, பேத்தியை பெட்ரோல் ஊற்றி கொன்ற நபர்.. விஷம் குடித்து தற்கொலை.. பதறிய பரமக்குடி

பரமக்குடியில் தன்னுடன் பழகிய பெண்ணை திருமணம் செய்து வைக்காத விரக்தியில் 2 பேரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apr 11, 2024 - 14:27
பாட்டி, பேத்தியை பெட்ரோல் ஊற்றி கொன்ற நபர்.. விஷம் குடித்து தற்கொலை.. பதறிய பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொதுவக்குடி என்ற கிராமத்தில் கணவரை பிரிந்து வனிதா என்ற பெண் வசித்து வந்தார். வனிதாவிற்கு திவ்யதர்ஷினி (12), குரு (15) என்ற இரண்டு குழந்தைகளுடன் உள்ளனர். இந்த நிலையில் ஆறுமுகசாமி என்பவருடன் வனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து வனிதாவை இரண்டாவது திருமணம் செய்து வைக்க கோரி அவரது தாய் குருவம்மாளிடம் ஆறுமுகசாமி கேட்டுள்ளார். அதற்கு குருவம்மாள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகசாமி தோப்பில் தூங்கி கொண்டிருந்த குருவம்மாள் மற்றும் வனிதாவின் குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். 

இதில் குருவம்மாள் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், தீ காயங்களுடன்‌ குழந்தைகள் இருவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் திவ்யதர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 80 சதவீத காயங்களுடன் சிறுவன் குரு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே பெட்ரோல் ஊற்றி எரித்த ஆறுமுகசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பரமக்குடி தாலுகா காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  தன்னுடன் பழகிய பெண்ணை திருமணம் செய்து வைக்காத விரக்தியில் 3 பேரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow