சவுக்கு சங்கர் மீது 6வது வழக்கு.. ஜாமீன் கிடைக்குமா? வீட்டில் ரெய்டு விட்ட தேனி போலீஸ்
சவுக்கு சங்கர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே 5 வழக்குகள் பதிந்து கைது செய்துள்ள நிலையில், ஆறாவதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாறி மாறி வழக்கு போட்டு சிறையை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு சவுக்கு சங்கரை லாக் செய்து வருகின்றனர் தமிழக காவல்துறையினர்.
சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயர்அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில், தேனி மாவட்டம் பூதிப்புரத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பேரில், சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சவுக்கு சங்கரை வருகிர 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இதனிடையே, பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம், திருச்சியில் பெண் போலீசார் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 3ஆவது வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே மூத்த பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த 2 வழக்குகளில் யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கான உத்தரவு நகலை கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் சென்னை போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.
இதே போல திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த டி.எஸ்.பி யாஸ்மின் என்பவர் திருச்சி சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நாகையிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ வின் போலியான ஆவணங்களை தயாரித்து அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி, போலி ஆவணங்களை புணைதல், போலி ஆவணங்கள் மூலம் பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உட்பட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6வது வழக்கிலும் கைதாகி உள்ளார்.
இதனிடையே, சவுக்கு சங்கரை குண்டாஸ் வழக்கில் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக சவுக்கு மீடியா நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கஞ்சா வியாபாரிகளுடன் சவுக்கு சங்கருக்கு தொடர்பு எப்படி ஏற்பட்டது. கஞ்சா வாங்கி வைத்து விற்பனை சொய்தாரா? கஞ்சா கைமாறியது தொடர்பாக ஆவணங்கள் இருக்கிறதா? என்று சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் இல்லத்திலும், தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் அதிரடியாக தேனி போலீசார் சோதனைகளை மேற்கொண்டனர்.
கஞ்சா விற்பனை மேற்கொண்ட நபர்களிடம் எவ்வாறு சவுக்கு சங்கருக்கு தொடர்பு ஏற்பட்டது எத்தனை ஆண்டு காலமாக இது நடைபெற்று வருகிறது? என்பது குறித்தும் அவர் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய வங்கி கணக்குகள் அலுவலகத்தில் உள்ளதா? ஏதாவது கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருக்கிறாரா என்பது குறித்தும் அதிரடியாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல சென்னை தியாகராய நகர் ராஜா பாதர் தெருவில் உள்ள கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள அலுவலகத்தில் 6 பேர் கொண்ட போலீசார் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது இல்லத்திலும் சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில் ஏதாவது கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதா அல்லது அது தொடர்பாக வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என சோதனையின் முடிவில் தான் முழுமையான தகவல் வெளியாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?