முருகன், சிவன் இந்து கடவுளா? சந்தேகம் கிளப்பும் சீமான்
“முருகன், சிவன், மாயவன் இந்து கடவுளா?. என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தேகம் கிளம்பியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது , “திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சினையாக்க முயற்சிக்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக இல்லாத பிரச்சினையை இப்போது கையில் எடுப்பது ஏன்? திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுகள் முழு காரணம்.
தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இந்த ஆட்சி நிறைவேற்றிய நல்ல திட்டங்களை கூற முடியுமா? தேர்தல் வரும் போதுதான் கட்சிகளுக்கு மக்களின் மீது பாசம் வருகிறது. அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை செய்தார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
முருகன், சிவன், மாயவன் ஆகியோர் இந்து கடவுளா? என்னோடு யாராவது தர்க்கம் செய்ய முடியுமா? தேர்தல் சமயத்தில் திடீர் பாசம் காட்டுகிறார்கள். மதம் மனிதனுக்கானதா அல்லது மனிதனுக்காக மதமா?. மதத்தைப் போற்றுகிறீர்கள் ஆனால் இங்கே மனிதனைப் போற்றுகிறீர்களா? ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் வாழுகின்ற நாடாக மாற்ற பார்க்கிறார்கள்.
ஆனால் நாங்கள் மனிதர்கள் வாழும் நாடாக உருவாக்க நினைக்கிறோம். திமுக அரசுக்கு எதிராக நாள்தோறும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஓட்டுக்கு காசு கொடுக்காமல், போட்டியிடும் துணிச்சல் திமுக, அதிமுகவுக்கு உள்ளதா?” இவ்வாறு சீமான் பேசினார்.
What's Your Reaction?

