கொல்கத்தாவில் வன்முறை: மெஸ்ஸியை பார்க்க முடியாததால் ரசிகர் கொந்தளிப்பு
கொல்கத்தாவில் மெஸ்ஸியை பார்க்க முடியாததால் கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி வருகை தந்துள்ளார். ‘GOAT இந்தியா டூர் 2025'-ன் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார்.
கொல்கத்தாவில் தனது சிலையை காணொலி மூலம் திறந்துவைத்த பின், சால்ட் லேக் ஸ்டேடியத்தில் ரசிகர்களை சந்தித்தார். நீண்ட நேரம் காத்திருந்து மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்கள், நாற்காலிகளை தூக்கி வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.
மெஸ்ஸி மேடைக்கு வந்து 20 நிமிடங்கள் ஆகியும் முக்கிய பிரமுகர்கள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். மைதானத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த டெண்டுகளை ரசிகர்கள் சூறையாடினர். கலவரம் நடந்த இடம் போல் கால்பந்து மைதானம் மாறியது.
சால்ட் லேக் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய நிலையில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. மைதானத்தில் வன்முறையில் ஈடுபட்ட கால்பந்து ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே மெஸ்ஸி புறப்பட்டுச் சென்றார்.
முதல்வர் மம்தா மன்னிப்பு
ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகுந்த பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யாதது தான் வன்முறைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து, முதல்வர் மம்தா மெஸ்ஸியிடம் மன்னிப்பு கோரினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து முதல்வர் மம்தா உத்தரவிட்டுள்ளார். அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியும் மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நாளை மோடியுடன் சந்திப்பு
இரண்டாவது நாள் நாளை மும்பை செல்லும் மெஸ்ஸி, மாலை 5:00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவில் 45 நிமிடம் 'பேஷன்' நிகழ்வு நடக்கும். இதில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மூன்றாவது நாள் நாளை மறுநாள் (டிச. 15), டில்லி செல்லும் மெஸ்ஸி, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

