அரூர்:கல்குவாரியை மூடக்கோரி ஆறு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கல்குவாரியால் விவசாய நிலங்கள் மாசுபட்டு, விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

Nov 17, 2023 - 10:42
Nov 17, 2023 - 11:50
அரூர்:கல்குவாரியை மூடக்கோரி ஆறு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

அரூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி ஆறு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட தென்கரைகோட்டை வருவாய்க்கோட்டத்தில்  வடகரை, கோபிசெட்டிபாளையம் டி.துறிஞ்சி அள்ளி, அய்யப்பன் நகர், மங்காநேரி, தட்சானூர் மேடு என  6 கிராமங்களில் வசித்து வரும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். 

இயற்கை சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கல்குவாரி இங்கு வடகரை கிராமத்தில் பொன் குரு  மெட்டல் என்னும் பெயரில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் தென்கரை கோட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “பொன் குருப்ஸ் மெட்டல் எனும் பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது.சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் பத்தடி ஆழத்தில் கற்கள் எடுக்கப்பட்டுள்ளது. கல்குவாரியால் காற்று, தண்ணீர் ,ஒலி, மாசு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் மட்டும் பாதிக்கப்பட்டு விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காத சூழல் உள்ளது. குவாரிகளுக்கு வந்து செல்லும் வாகனங்களால் சாலைகள் பாதிப்படைந்து வருகின்றன. 

விவசாய நிலங்கள் மாசுபட்டு, விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .அதிக ஆழத்திற்கு கற்கள் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனால் குடிநீர் பிரச்சினை விவசாய நிலத்திற்கு நீர் எடுப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது.குவாரிக்கு 100 மீட்டர் அருகில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு விவசாயிகள் தங்களின் சொந்த செலவில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லாற்றிலிருந்து பைப் லைன் அமைத்து நீர் நிரப்பி வருகிறோம். அப்படி கஷ்டப்பட்டு நீர் நிரப்பினால் ஒரு வாரம் கூட நீர் தேங்குவதில்லை. குவாரியில் பாறைகள் வெடிவைத்து தகர்க்கும் போது அருகில் உள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் கட்டிடங்கள் பெரும் அதிர்வுக்குள்ளாகி இடிந்து விழுகிறது.

கல்குவாரியில் இருந்து வெளிவரும் மாசு காற்றினை சுவாசிப்பதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உபாதைக்கு மக்கள் ஆளாகி வருகிறார்கள்.கல்குவாரியில் இருந்து வெளிவரும் மாசுபட்ட காற்றினை கால்நடைகள் சுவாசிப்பதால் கால்நடைகள் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுகிறது.மாசுபட்ட புல் மற்றும் பயிர்களை கால்நடைகள் உண்பதில்லை. இவ்வாறு பல பாதிப்புக்கு பொது மக்கள் ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.ஆகவே கல்குவாரி உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்” என கிராம மக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

- பொய்கை கோ.கிருஷ்ணா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow