தருமபுரி: விஷம் தந்து மகனைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், கொலை முயற்சி வழக்கில் 5 வருடம் கடுங்காவல் தண்டனையும் விதிப்பு

Nov 17, 2023 - 10:52
Nov 17, 2023 - 12:00
தருமபுரி: விஷம் தந்து மகனைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

குடும்பத்தகராறில் மகனுக்கு பூச்சி மருந்து கொடுத்துகொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முரளி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஷகிரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு சந்தர், லூர்து என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர்.

இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் இருவரும் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்தனர். அதன்பிறகு இருவருக்குமிடையே சமரசம் ஏற்பட்டு மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். சிறிது காலத்துக்குப் பிறகு அவர்களுக்குள் மீண்டும் குடும்பதகராறு ஏற்பட்டதில் பிரிந்துள்ளனர். இதனால் மனமுடைந்த முரளி கடந்த 24.8.2017 அன்று இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் பூச்சி மருந்து கொடுத்துவிட்டு, தானும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி மகன் சந்தர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து பொம்மிடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து முரளி, மகனை கொலை செய்த குற்றம் உறுதியானதையடுத்து,கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை முயற்சி வழக்கில் 5 வருடம் கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும், தற்கொலை முயற்சி வழக்கில் 1 வருடம் சிறை தண்டனை என ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மோனிகா தீர்ப்பு வழங்கினார்.

- பொய்கை கோ.கிருஷ்ணா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow