தேர்தல் விதிமீறல்... 'பிரதமர் மோடியின் தியானத்துக்கு தடை விதியுங்கள்'... திமுக-காங்கிரஸ் புகார்!
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்வது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
கன்னியாகுமரி: பிரதமர் மோடி கன்னியாகுமரியில் 3 நாள் தியானம் செய்ய உள்ள நிலையில், இது தேர்தல் விதிமீறல்; இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளன.
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் 4ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வருகிறார். இன்று மாலை டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். பின்பு கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்று 45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி வருகையால் கன்னியாகுமரியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 3,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்வது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மேலும் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸின் அபிஷேக் சிங்வி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் டெல்லி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், ''பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்வது தேர்தல் விதிகளை மீறிய செயல். தேர்தலுக்கு முந்தைய 48 மணி நேரத்தை தேர்தல் பரப்புரையாக பிரதமர் மாற்ற முயற்சி செய்கிறார். ஆகவே குமரியில் பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
இதேபோல், 'தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நிலையில், பிரதமர் தியானம் மேற்கொள்வது அப்பட்டமான விதிமீறல். ஆகவே பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?