"பாஜகவுக்கு மத்தவங்கதான் விருந்தாளி; நாங்க வீட்டுல இருக்கிறவங்க" - பண்ருட்டி ராமசந்திரன் விளக்கம்...
பாஜகவை பொறுத்தவரை கூட்டணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்கள் விருந்தாளிகள் என்றும் தங்களது தரப்பு வீட்டு உறுப்பினர்கள் போன்றென ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் தங்களது அரசியல் நிலைப்பாடு என்று கூறினார். எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா என்ற கூட்டணி கடந்த காலங்களில் பல கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றி குழப்பம் விளைவித்தார்களே தவிர நிலையான அட்சி ஏற்படவில்லை என்றார். இந்தியாவில் நிலையான ஆட்சி வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்பதால் நிலையான ஆட்சியை தரும் வாய்ப்பு பிரதமர் மோடிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மட்டுமே உள்ளது என்று பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்தார்.
அண்ணாமலையில் யாத்திரை நிறைவு விழாவில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் உங்களது தரப்பினர் கலந்து கொள்ளாதது ஏன்? அழைப்பு விடுக்கப்படவில்லையா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். விருந்துக்கு அழைத்துவிட்டு வீட்டில் உள்ளவர்களே சாப்பிடுவதில்லை, வீட்டில் உள்ளவர்கள் கடைசியாகத்தான் சாப்பிட வேண்டும். அவர்கள் விருந்தினர்களை அழைத்துள்ளார்கள், வீட்டில் இருக்கும் எங்களை அழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று பண்ருட்டி ராமசந்திரன் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம் , நாங்களும், பாஜக உயர்மட்ட தலைவர்களும் இன்று வரை பேசி உள்ளோம் என்றும் பிரதமரை சந்திக்க எந்த நேரமும் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை; நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறோம். நாளை (பிப்.28) நடைபெறும் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
What's Your Reaction?