ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது - இபிஎஸ்
"I.N.D.I.A. கூட்டணியில் உள்ளவர்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது?"
மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சின்ன கடைவீதியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்காக வாழாமல் தங்கள் வீட்டு மக்களுக்காக வாழ்கிறார். மக்களின் மீது அக்கறை இல்லாத பொம்மை முதலமைச்சராக செயல்படுகிறார். இவரை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. நான் இப்போதும் விவசாயம் செய்து வருகிறேன். எனவே, விவசாயிகளின் கஷ்டங்கள் எனக்கு புரியும். செல்வ செழிப்பில் வாழ்ந்த மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகளின் கஷ்டங்கள் புரியாது" என கடுமையாக விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைக்கும் என ஸ்டாலின் கூறியதும் அந்த கூட்டணியில் இருந்தவர்கள் பலர் பிரிந்து செல்கின்றனர். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் காங்கிரசை எதிர்த்து போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் இருக்கிறது. இவர்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது. திமுக அரசின் ஊழல் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தோம். ஆனால், அவர் விசாரிக்கவில்லை. அப்படி விசாரித்திருந்தால் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று இருக்கும்" என்றார்.
மேலும், "பாஜகவிற்கு தான் பயப்படுகிறேன் என்று கூறுகின்றனர். அதிமுககாரர்கள் யாருக்கும் பயப்படுபவர்கள் இல்லை. எம்ஜிஆர் பயிற்சி பட்டறையில் படித்த மாணவர்கள் நாங்கள். தமிழக மக்களுக்கு பிரச்னை வந்தால் அதனை உடைக்க பாடுபடுவோம். கூட்டணியில் இருந்தவரை கூட்டணி தர்மத்தை கடைபிடித்தோம். உங்களை (திமுக) போல் கூட்டணியில் இருந்துகொண்டு குழிபறிக்கும் வேலை பார்ப்பது இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை கொடுத்து இணைந்து பணியாற்றுவோம்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
What's Your Reaction?