AstraZeneca தடுப்பூசி சர்ச்சை... திரும்ப பெறப்பட்ட தடுப்பூசி இதுதான்... கோவிஷீல்ட்டுக்கு தடை இல்லை?!
கோவிஷீல்டு தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக அதனை தயாரித்த ஆஸ்ட்ராசெனகா நிறுவனமே ஒப்புக்கொண்ட நிலையில், ஒரு குறிப்பிட்ட கொரோனா தடுப்பூசியின் தயாரிப்பை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவிட் காலத்தில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், பிரிட்டனில் உள்ள ஆஸ்ட்ராசெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிட்யூட் உற்பத்தி செய்து, பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், கோவிஷீல்டு செலுத்திக்கொண்ட தனது குழந்தைகளின் மூளைப்பகுதியில் ரத்தம் உறைவு பிரச்னை ஏற்பட்டதாகவும், அதற்கு தடுப்பூசியே காரணம் எனவும் கூறி, ஜேமி ஸ்காட் என்பவர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்காக 100 மில்லியன் பவுண்ட் அளவில் நிவாரணமும் அவர் கேட்ட நிலையில், இதேபோன்று 51 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதனை ஆஸ்ட்ராசெனக்கா நிறுவனம் முற்றிலும் மறுத்தபோதும், தங்களது தடுப்பூசியை பயன்படுத்தும்போது ரத்த உறைதல், ரத்தத்தட்டுகள் குறைதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில் அந்நிறுவனம் தெரிவித்தது. ஆனால், அவ்வாறு ஏன் ஏற்படுகிறது எனத் தெரியவில்லை எனவும் அதில் கூறப்பட்டது. இத்தகவல், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவிஷீல்டு செலுத்திக்கொண்டோர் பீதியில் உறைந்தனர். தொடர்ந்து கோவிஷீல்டுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக அதிக தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதால் தங்களது வக்ஸ்செவ்ரியா (Vaxzevria) கொரோனா தடுப்பூசியை ஐரோப்பாவின் சந்தைகளில் இருந்து திரும்பப் பெறுவதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. தங்கள் தடுப்பூசி பயன்பாட்டின் முதல் ஆண்டில் மட்டும் 6.5 மில்லியனுக்கும் அதிகமானோர் காக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா தெரிவித்துள்ளது. பல மாறுபட்ட கொரோனா தடுப்பூசிகள் பரவலாக சந்தையில் கிடைப்பதை கருத்தில் கொண்டு வக்ஸ்செவ்ரியா தடுப்பூசி திரும்பப் பெறப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வக்ஸ்செவ்ரியாவின் தேவை குறைந்ததால் இனி அது தயாரிக்கப்படவும் விநியோகிக்கப்படவும் மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5ம் தேதி இதுதொடர்பான முடிவெடுக்கப்பட்ட நிலையில், மே 7ம் தேதி முதல் முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஆஸ்ட்ராசெனகாவே ஒப்புக்கொண்டது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில், வாக்ஸ்செவ்ரியா என்ற மற்றொரு தடுப்பூசியின் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.