கொடைக்கானலில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ.. புகை மண்டலமாக மாறிய பூம்பாறை மலைக்கிராமம்
கொடைக்கானல் பூம்பாறை மலைக்கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் தொடர்ந்து பரவி வரும் காட்டு தீயால் மின் தடை ஏற்பட்டு மலைகிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், அங்குள்ள செடி, கொடிகள் மற்றும் புல்வெளிப் பகுதிகள் காய்ந்து, சருகுகளாக உள்ளதால், அதிக வெயிலின் காரணமாக வனப்பகுதி மற்றும் தனியார் நிலங்களில் அடிக்கடி தீ பற்றி எரிந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 5) மாலை பூம்பாறை மலைக்கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் தீடீரென காட்டுத் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் மரங்களில் பற்றிய தீ, கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது . இதனால் பூம்பாறை கிராமம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
மேலும், பிரதான சாலை அருகே உள்ள இந்த வனப்பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிவதால், அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்தனர். காட்டுத் தீ குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடைக்கானல் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினருடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னவனூர், கவுஞ்சி ஆகிய பகுதிகளுக்கு இவ்வழியாக மின் கம்பிகள் மூலம் மின்விநியோகம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், காட்டுத்தீயால், தற்காலிகமாக மலை கிராமங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகள் இருளில மூழ்கியுள்ளன.
What's Your Reaction?