அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க செந்தில் பாலாஜி மனு...நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு!

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

Jun 19, 2024 - 07:51
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க செந்தில் பாலாஜி மனு...நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு!
செந்தில் பாலாஜி வழக்கு

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு வழங்க உள்ளது. 

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். 

கடந்த 2014 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் கடந்த ஆண்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தது. செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு கடந்து விட்டது.

உடல்நிலை உள்பட பல்வேறு காரணங்களை கூறி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் தொடந்து தள்ளுபடி செய்து வருகின்றன. இதுவரை சுமார் 39 முறை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, 'வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால் குற்ற விசாரணை முறைச் சட்டம் 91ன் படி ஆவணங்களைக் வழங்கக் கோரி மனுக்களை தாக்கல் செய்ய முடியாது. ஆகேவ இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தல்ல' என்று அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது.

இதைஏற்ற நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அதே வேளையில் அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீது 19ம் தேதி (அதாவது இன்று) உத்தரவு பிறக்கப்படும் என்று நீதிமன்றம் கூறி இருந்தது.

அதன்படி இந்த வழக்கு இன்று காலை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது முக்கிய உத்தரவினை நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளதால், அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow