'கிக்’குக்காக கள்ளச்சாராயம் குடிக்கின்றனர்... அமைச்சர் துரைமுருகன் பேச்சு... வானதி சீனிவாசன் கண்டனம்!

''சிலர் 'கிக்' வேண்டும் என்பதற்காக கள்ளச்சாராயம் குடிக்கின்றனர். உழைப்பவர்கள் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவைப்படுகிறது. அரசின் மதுபானம் soft drink போல் கிக் இல்லாமல் இருப்பதால் சிலர் கள்ளச்சாராயத்தை தேடிச் செல்கின்றனர்'' என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Jun 29, 2024 - 17:40
'கிக்’குக்காக கள்ளச்சாராயம் குடிக்கின்றனர்... அமைச்சர் துரைமுருகன் பேச்சு... வானதி சீனிவாசன் கண்டனம்!
வானதி சீனிவாசன்

சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சர்களே மதுப்பழக்கத்தை ஆதரித்து பேசும் சூழல் நிலவுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகி விட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கள்ளச்சாராயத்தை ஒழிப்பது மட்டுமின்றி, டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் அடைத்து முழுமையாக மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டை மதுவின் பிடியில் இருந்து மீட்க முடியும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. 

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு சட்ட திருத்த சட்ட மசோதாவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமி கொண்டு வந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் தமிழ்நாட்டில் மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, ''தமிழ்நாட்டில் தற்போது பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல்  இல்லை. ஒரு மதுக்கடையை மூடினால் அடுத்த கடையில் போய் மக்கள் குடிக்கிறார்கள். இதனால் மதுக்கடைகளை மூடினாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது'' என்றார்.

இதற்கிடையே சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ''சிலர் 'கிக்' வேண்டும் என்பதற்காக கள்ளச்சாராயம் குடிக்கின்றனர். உழைப்பவர்கள் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவைப்படுகிறது. அரசின் மதுபானம் soft drink போல் கிக் இல்லாமல் இருப்பதால் சிலர் கள்ளச்சாராயத்தை தேடிச் செல்கின்றனர். மனிதனாய் பார்த்து திருந்த வேண்டும். தெருவுக்கு தெரு காவல் நிலையம் அமைக்க முடியாது'' என்றார்.

தமிழ்நாடு அமைச்சர்களே மதுவுக்கு ஆதரவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 

அப்போது பேசிய அவர், ‘’கள்ளச்சாராய சம்பவத்தில் ஏற்ப்பட்ட பிரச்சனைகளை முழுமையாக கலைவதற்கான நடவடிக்கை தமிழ்நாடு அரசிடம் இல்லை. சட்டப்பேரவையில் அமைச்சர்களே குடியை ஆதரித்து பேசும் சூழல் ஏற்பட்டுள்ளது’’ என்று கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:- 3 மாதங்களுக்கு மேலாக நடைபெறக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் 8 நாட்களில் முடிவடைந்துள்ளது. இதனால் மக்களின் பிரச்சனைகள் குறித்து பேரவையில் பேச முடியவில்லை. இது பெரிய ஏமாற்றத்தை தருகிறது. மக்களின் பிரச்சனை குறித்து பேரவையில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

தமிழ்நாட்டில் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என்று நடிகர் விஜய் பேசி உள்ளார். நாங்கள் அரசியலில் நீண்ட காலமாக மக்கள் பணியை செய்து வருகிறோம். அவர் தற்போதுதான் அரசியல் பணிக்கு வந்துள்ளார். விஜய் நடிகர் என்பதால் அவர் பேசும் பேச்சு ஊடகங்களால் பெரிதாக பேசப்படுகிறது’’ என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow