"நாட்டில் நடப்பது தத்துவப் போர்" தமிழ், தமிழர்களைத் தொட முடியாது.. சூளுரைத்த ராகுல்காந்தி!
நரேந்திர மோடி மட்டுமல்ல உலகத்தில் எந்த சக்தியாக இருந்தாலும், தமிழர்களை, தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை தொட்டுப்பார்க்க முடியாது என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஆட்சியைக் கைப்பற்ற I.N.D.I.A கூட்டணியும் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் தத்துவப் போர் நடந்து கொண்டிருக்கிறது எனவும் ஒருபுறம் பெரியார் போன்ற தலைவர்கள் போதித்த சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவையும் மற்றொருபுறம் நரேந்திர மோடி போன்றவர்கள் போதித்த வெறுப்பும், துவேஷமும் மோதுகின்றன எனவும் கூறினார். மேலும், தமிழ் மொழி மற்ற எந்த இந்திய மொழிகளுக்கும் சளைத்ததல்ல எனவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யத் தயாராக இல்லாத பிரதமர் மோடி, நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளார் எனவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை அரசியல் ஆயுதங்களாக பாஜக பயன்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நரேந்திர மோடி மட்டுமல்ல உலகத்தில் எந்த சக்தியாக இருந்தாலும், தமிழர்களை, தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை தொட்டுப்பார்க்க முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், நாம் இந்தத் தத்துவப் போரில் உறுதியாக வெற்றி பெறப்போகிறோம் எனவும் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்தார்...
What's Your Reaction?