திமுக என்ன அரச குடும்பமா? அப்பாவுக்கு அடுத்து பையன்தான் வரணுமா? எடப்பாடி பழனிசாமி சாடல்!
அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்றும் திமுக ஆட்சிதான் இருண்ட கால ஆட்சி என்றும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, சிதம்பரத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக தொண்டர்களால் உருவான கட்சி என்றும், தான் பொதுச் செயலாளர் என்று சொல்லிக்கொள்வதை காட்டிலும் அதிமுக தொண்டன் என்று சொல்லி கொள்வதையே பெருமையாக கருதுவதாகவும் கூறினார்.
மேலும் தனக்குப் பின், ஒரு சாதாரண தொண்டன் கூட அதிமுகவில் பொதுச் செயலாளர் ஆகலாம். ஆனால், திமுகவில் தனக்குப் பிறகு தனது மகனை முன்னிறுத்த மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். திமுக என்ன மன்னர் பரம்பரையா? அரச குடும்பமா? ஒரு சாதாரண தொண்டனை தலைவனாக திமுகவில் கொண்டு வர முடியுமா? திமுகவில் தொண்டர்கள் அடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.
அதிமுகவின் ஆட்சி இருண்ட காலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு, எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். திமுகவின் ஆட்சி தான் தமிழகத்தின் இருண்ட காலம் என்றும் அதிமுக ஆட்சி பொற்காலம் என்றும் 2006 - 2011 வரை திமுக தமிழ்நாட்டில் ஆட்சி செய்தபோது கடும் மின்வெட்டு ஏற்பட்டதாகவும் அதனை அதிமுக அரசு தான் சீர்செய்து மின்மிகை மாநிலகமாக மாற்றியதாகவும் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், போதைப்பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகவும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் திமுகவினர் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
What's Your Reaction?