சாதி மறுப்புத் திருமணம்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்குதல்.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்

சாதி மறுப்புத் திருமண வழக்குகளை விரைந்து நடத்திட அரசுத் தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். புதிய சட்டங்கள் இயற்றுவதைவிட வழக்குகளை முறையாக நடத்தி, குற்றவாளிகளைச் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத்தருவது சரியாக இருக்கும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

Jun 25, 2024 - 13:09
சாதி மறுப்புத் திருமணம்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்குதல்.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்

திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 
கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி, மணமக்களின் திருமணத்தை சட்டபூர்வமாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், கீழ் நிலையில் உள்ள காவலர்கள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவரும் கைது செய்ய வேண்டும் என்றும்,இந்த தாக்குதல்  சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் இதற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைதொடர்ந்து உறுப்பினர்கள் வேல்முருகன்,  ஜவாஹிருல்லா, சிந்தனை செல்வம், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.


முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு விளக்கம் அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி, இருவேறு சமூகத்தைச் சார்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதுதொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, மணப்பெண்ணின் குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 7 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர், 7 ஆண்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். விசாரணையில் இச்சம்பவத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாகச் தெரியவந்ததையடுத்து, இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுபோன்ற பிற்போக்குத்தனமான சமூகக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை வாங்கித் தரப்படுகிறது.
இதற்கென ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதைவிட, தற்போது இதுபோன்ற குற்றங்களுக்கு நடைமுறையிலுள்ள  வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு கருதுகிறது.

இந்தக் குற்றங்களை வெறும் குற்றவியல் நிகழ்வாக மட்டும் பார்க்காமல், இதன் சமூகப் பொருளாதார பின்னணிக் காரணிகளை வைத்து அவற்றை ஆராய்ந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையைப் பெற்றுத் தருவது ஒருபுறம் இருந்தாலும் சமுதாயத்தில் பொருளாதார வளர்ச்சியின் மூலமாக பெண் கல்வி உயரும்போதும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் ஒரு வளர்ச்சி பெற்ற சமுதாயமாக உயரும்போதும் இதுபோன்ற குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.

தற்போது நமது இலக்கு சற்று தொலைவில் இருப்பதாகத் தோன்றினாலும், நடைமுறையில் இன்று சந்தித்து வரும் சமூகரீதியிலான பிரச்சினைகளை, அதன் விளைவுகளை உடனடியாக எதிர்கொள்ளவும், அதற்கொரு தனி முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவும் சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்புஇ குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். 

அதேபோல், தற்போது இதுபோன்ற குற்றங்களில் எல்லாம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி காவல் ஆய்வாளர் விசாரணை அலுவலராக நியமிக்கப்படுகிறார். ஆனால் இவ்வழக்குகளில் விசாரணையின் தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் வகையிலும், வேகப்படுத்தும் நோக்கிலும் விசாரணை அலுவலராக காவல் துணைக் கண்காணிப்பாளரை நியமிப்பது குறித்து சட்ட ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அளவிலான குழுக்கள் அவை அமைக்கப்பட்டதன் பின்னணி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றியெல்லாம் மீண்டும் ஆய்வு செய்து அதுகுறித்தும் தேவையான முடிவுகள் எடுக்கப்படும், என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow