திமுக முன்னாள் எம்பி வேணுகோபால் மரணம்..! கண்ணீரில் உடன்பிறப்புகள்..!

Feb 15, 2024 - 21:43
Feb 16, 2024 - 10:19
திமுக முன்னாள் எம்பி வேணுகோபால் மரணம்..! கண்ணீரில் உடன்பிறப்புகள்..!

திருவண்ணாமலையை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் உடல்நலக்குறைவால் காலமான நிலையில்,அவரது மறைவுக்கு கட்சித் தொண்டர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

88 வயதான வேணுகோபால் திருப்பத்தூர், திருவண்ணாமலை தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த வேணுகோபால் 5 முறை எம்.பி, 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  1977, 1984 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் தண்டராம்பட்டு தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

 அதேபோல் 1996, 1998, 1999, 2004 என தொடர்ச்சியாக திருப்பத்தூர் தொகுதியில் நான்கு முறை வென்று எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அதில் குறிப்பிட்டு சொல்லும் வகையில், கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை தொகுதியில் பாமகவின் தீவிர பேச்சாளர் காடுவெட்டி குருவை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் வேணுகோபால். 

மேலும் 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் வேணுகோபால் தான் என்று சொன்னால் மிகையாகாது. திருவண்ணாமலை மாவட்ட திமுகவின் மூத்த நிர்வாகியாகவும், தெற்கு மாவட்ட அவைத் தலைவராகவும் இருந்து வந்த வேணுகோபால் உடல்நலக் குறைவால் மறைந்துள்ளது திமுக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சில தினங்களுக்கு முன்பு வரை கட்சி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட நிலையில், திடீரென நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

85 வயது கடந்தவருக்கு  அறுவை சிகிச்சை செய்வது ரிஸ்க் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆபரேஷன் செய்து வீட்டில்  என்னை பார்த்துக்க யார் இருக்கா?  விடுங்க நடப்பது நடக்கட்டும் எனத் தனது இறப்பை அறிந்துகொண்டு ஆபரேஷனுக்கு மறுத்துவிட்டார். நேற்று மதியம் அவரது உயிர் பிரிந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow