தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் பாஜக தலைவர்கள்..! தேனி, தஞ்சையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பரப்புரை ...

பாஜக சார்பில் ஏற்கனவே பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வந்து பிரசாரம் மேற்கொண்டனர்.

Apr 7, 2024 - 15:27
தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் பாஜக தலைவர்கள்..!  தேனி, தஞ்சையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பரப்புரை ...

மக்களவைத் தேர்தலையொட்டி 2 நாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார். 

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பாஜக சார்பில் ஏற்கனவே பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வந்து பிரசாரம் மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் தமிழகம் வருவதற்காக திட்டமிட்டுள்ளனர். 

அதன்படி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார். நாளை (ஏப்ரல் 8) டெல்லியில் இருந்து புறப்பட்டு நண்பகல் 12.40 மணிக்கு மதுரை வரும் ராஜ்நாத் சிங், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனி சென்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பரப்புரை செய்யவுள்ளார்.

தொடர்ந்து தஞ்சை செல்லும் ராஜ்நாத் சிங், பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து மாலை 4.20 மணியளவில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் பின்னர், நாகைக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லும் ராஜ்நாத் சிங், பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷை ஆதரித்து மாலை 5.50 மணியளவில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதன் பின்னர் அங்கிருந்து மதுரை வரும் ராஜ்நாத் சிங் இரவு ஓய்வெடுத்த பின்னர், அடுத்த நாள் 9 ஆம் தேதி காலை 9.10 மணியளவில் மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்ட பின்னர் அருணாச்சல பிரதேசம் புறப்பட்டு செல்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow