ஏப்ரல் 3-வது வாரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு?: ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்
தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் ஒரே கட்டமாக வாக்குபதிவை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. அதற்கான அறிவிப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் வரும் மார்ச் 2வது வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோசி மற்றும் இணை, துணை தேர்தல் ஆணையர்கள் 4 பேர் என மொத்தம் 7 பேர் இன்று (25ம் தேதி) காலை 9.55 மணிக்கு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் புறப்பட்டு மதியம் 12.55 மணிக்கு சென்னைக்கு வருகின்றனர்.
பின்னர் அங்கிருந்து பகல் 1 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு செல்கின்றனர். அங்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு விட்டு இரவு புதுச்சேரியில் தங்குகின்றனர். நாளை (26ம் தேதி) காலை 10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, காலை 11 மணிக்கு சென்னைக்கு வருகின்றனர். பின்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலான லீலா பேலசுக்கு செல்கின்றனர். அங்கிருந்தபடி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்குகின்றனர்.
சென்னையில் நாளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அன்றிரவு சென்னையில் தங்குகின்றனர். நாளை மறுதினம் (27ம் தேதி) காலையில் இருந்து மாலை வரை தமிழக தேர்தல் தொடர்பான அதிகாரிகளுடன் 2வது நாள் ஆலோசனை நடக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த ஆலோசனையின்போது, தலைமைச் செயலாளர், டிஜிபி, வருமானவரி துறை, சுங்கத்துறை, அமலாக்க துறை மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் (தேர்தல் அதிகாரிகள்), காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். பின்னர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து தேர்தல் தொடர்பான கருத்துகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கேட்கிறார்.
இந்த பணிகள் முடிந்ததும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். 27ம் தேதி மாலையுடன் தேர்தல் குறித்த 2 நாள் ஆலோசனை நிறைவு செய்துவிட்டு, மாலையில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் டெல்லிக்கு செல்கின்றனர்.டெல்லியில் ஆலோசனை நடத்திய பின்னர், சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 3வது வாரத்தில் தமிழகத்தில் ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கலாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

