"சாதி, மதம் பார்த்தால் உங்கள் ஓட்டு எங்களுக்குத் தீட்டு" சீமான் ஆவேசம்...
சாதி, மதம் பார்த்து எங்களுக்கு வாக்களிப்பதாக இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு ஓட்டு போடாதீர்கள் என்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அந்த ஓட்டு எங்களுக்குத் தீட்டு என்று கூறியுள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் மகேஷ் ஆனந்த்தை ஆதரித்து அணைக்கட்டு பகுதியில் சீமான் பரப்புரை செய்தார். அப்போது, “இதுவரை பல தேர்தல்களை நாடும், மக்களும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், ஒரு துளி மாறுதலும் இந்த மண்ணில் நிகழ்ந்ததில்லை. தேர்தல் களத்தில் எந்தவொரு சமரசமுமின்றி, வாக்குக்கு காசு கொடுப்பதில்லை. ஏனென்றால், என் மக்களை யார் ஏமாற்ற நினைக்கிறார்களோ, அவர்கள் தான் வாக்குக்கு பணம் கொடுப்பார்கள். உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்து, அதிகாரத்தை வைத்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றமாட்டார்கள்” என்று பேசினார்.
அமைச்சர் துரைமுருகனை விமர்சித்துப் பேசிய சீமான், “நாடாளுமன்றம் செல்ல இந்தி, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்று திமுக அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார். தமிழ் மட்டும் தெரிந்திருந்தால், அங்கு பேசுபவர்களின் வாயை மட்டுமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார். இவர்கள் தான், Hindi never English ever என்று பேசியவர்கள்” என்று விமர்சித்தார்.
திமுக குறித்துப் பேசும் போது, “இந்தியை எதிர்த்தவர்கள் திமுக அல்ல, திராவிடர் கழகம் அல்ல, தன்மானம் மிக்க தமிழ் மாணவர்கள் தான் கிளர்ச்சி செய்தனர். காங்கிரஸ் இந்தியைத் திணித்தார்கள், அவர்களுடன் கூட்டணி வைத்தது திமுக. கடந்த தேர்தலில் 39 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றம் சென்ற திமுக என்ன செய்தது, எதுவும் செய்யவில்லை. தற்போது, பெண்களுக்கு ரூ.1000 கொடுத்துவிட்டு திமுகவினர் என்னென்ன பேசினார்கள். அந்த இலவசத்தை பெண்கள் கேட்டார்களா? அதுவும் தகுதி பார்த்து கொடுக்கிறார்கள், என் தாய் தகுதியானவரா, இல்லையா என்று சொல்ல நீங்கள் யார்? தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, இலவசங்களை மக்கள் விரும்பவில்லை வெறுக்கிறார்கள் என்று பேசிய ஆதாரம் இருக்கிறது” என்று கூறினார்.
மேலும், “இழந்துவிட்ட உரிமையை மீட்க, இருக்கின்ற உரிமைகளைப் பாதுகாக்க நீங்கள் செய்யவேண்டியது ஒரே ஒரு வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு செலுத்தினால் போதுமானது. சாதி பார்த்து, மதம் பார்த்து எங்களுக்கு வாக்களிப்பதாக இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு ஓட்டு போடாதீர்கள், உங்கள் ஓட்டே எங்களுக்குத் தீட்டு” என்று சீமான் பேசியுள்ளார்.
What's Your Reaction?