ஆன்லைனில் பணப்பட்டுவாடா..? கோவை பாஜகவினர் மீது புகார் கொடுத்த திமுக நிர்வாகிகள்
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக, கோவையில் ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா செய்து வருவதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 19) நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதேபோல் கோவையில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக, பாஜகவினர் ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா செய்து வருவதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளரான பழனிச்சாமி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கோவை - அவிநாசி சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகேயுள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில், வெளியூர் ஆட்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த நபர்கள் தொலைபேசி வாயிலாக வாக்காளர்களை தொடர்பு கொண்டு அண்ணாமலைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்து வருவதாகவும்,கூகுள்பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியின் வாயிலாக வாக்காளர்களுக்கு தலா 250 ரூபாய் வீதம் பணம் அனுப்பப்படுவதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜக தேர்தல் அலுவலகத்தில் தங்கி இருப்பவர்களின் பெயர் மற்றும் ஊர் குறித்த தகவல்களுடன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடிக்கு இந்த புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?