முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிவு...தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

Mar 31, 2024 - 23:21
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிவு...தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து குறைந்து வருவதால் தேனி மாவட்ட மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. 

தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம் தேக்கடி அருகே உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் நீரை நம்பி 2,57,000 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும்,  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.50 அடியாக உள்ளது. மேலும், நீர்வரத்து விநாடிக்கு 105 கன அடியாக உள்ளது. 

இதனிடையே தேனி மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக தற்போது இரைச்சல் பாலம் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மழை இல்லாமல் இதே நிலை நீடித்தால் தேனி மாவட்டத்தில் கடுமையான  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow