வாட்ஸ் ஆப்பில் வலைவீசும் ஸ்கேமர்ஸ்... போக்குவரத்து ஆணையர் பெயரில் நூதன மோசடி... உஷார் மக்களே!

ஐஏஎஸ் அதிகாரியின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் DP ஆக வைத்து பண மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

Apr 18, 2024 - 19:53
வாட்ஸ் ஆப்பில் வலைவீசும் ஸ்கேமர்ஸ்... போக்குவரத்து ஆணையர் பெயரில் நூதன மோசடி...  உஷார் மக்களே!

Facebook, Twitter, whatsapp போன்ற சமூக வலைதளங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெயரில், அவர்களது புகைப்படங்களை கொண்டு போலி ஐடிகளை உருவாக்கி, பின்னர் அந்த அதிகாரிகளின் கீழ் பணியாற்றி வரக்கூடிய ஊழியர்கள் மற்றும் நண்பர்களிடம் அவசர தேவை என பணம் கேட்டு மெசேஜ் அனுப்பி மோசடி செய்யும் மர்ம கும்பல் குறித்த வழக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 

உயர் அதிகாரி பெயரில் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பப்படுவதால், விசாரிக்காமல் அதை நம்பி சக அதிகாரிகளும், ஊழியர்களும் பணத்தை அனுப்பிவிட்டு, நேரடியாக கேட்ட பின்பே அது மோசடி என்பது தெரியவருகிறது. இது தொடர்கதையாகி வரும் நிலையில், இதே போன்ற ஒரு மோசடி மீண்டும் நடந்துள்ளது.  


தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக பதவி வகித்து வருபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சண்முகசுந்தரம். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்துக்கொண்டு, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ‌போக்குவரத்து துறை மற்றும் சாலை பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் சக அதிகாரிகளிடம் பணம் கேட்டு குறுந்தகவல் அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


இந்த தகவல் தனக்கு தெரியவந்ததை தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்திய போது, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் சக அதிகாரிகள், ஊழியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டு‌ தொந்தரவு செய்தது தெரியவந்தது. எனவே தனது புகைப்படத்தை வைத்து பணமோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow