தமிழ்நாட்டில் பாஜக வளரவே இல்ல.. திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ-அமைச்சர் ரகுபதி

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஒப்புதல் அளிக்காது

Feb 17, 2024 - 08:39
Feb 17, 2024 - 13:05
தமிழ்நாட்டில் பாஜக வளரவே இல்ல.. திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ-அமைச்சர் ரகுபதி

பண பலத்தை வைத்துக்கொண்டு பாஜக தமிழ்நாட்டில் வளர்வது போல் மாயத் தொற்றத்தைக் காட்டி வருகிறார்களே அன்றி, பாஜக இன்னும் வளரவே இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு தேர்தல் களத்தைப் பொருத்தளவில் திமுக வெர்சஸ் பாஜக என்ற நிலைப்பாடு இல்லை என்று கூறினார். தமிழ்நாட்டில் பாஜக இன்னும் வளரவே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர், பண பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு பாஜக வளர்ந்து வருவதுபோல் மக்களிடையே மாயத் தொற்றத்தை காட்டி வருகிறது என்றார்.

திமுகவை எந்தக் கூட்டணியும் தொட முடியாது என்று சவால் விட்ட அமைச்சர் ரகுபதி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று கூறினார். மேலும், முன்னாள் அதிமுக ஆட்சியில் எந்தவித நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டிய அமைச்சர் ரகுபதி, தற்போது திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியாமல் உளறி வருகிறார் என்றும் விமர்சித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். திமுகவை பொருத்தவரை, தேர்தல் அறிக்கைதான் கதாநாயகனாக இருக்கும் என்று கூறினார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஒப்புதல் அளிக்காது என்றும், இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் குழுவுடன் பேசி வருகிறார் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow