ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம்... அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Feb 17, 2024 - 17:53
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம்... அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

உள்ளூர் திட்டமிடல் ஆணையத்தின் சார்பில் ஈரோடு மாஸ்டர் பிளான் இணையதளத்தை வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசியபோது, "60 நாட்களுக்குள் மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை இணையதளம் மூலம் அளிக்கலாம். ஏற்கனவே, மாவட்டத்தின் 80.71 சதுர கி.மீ நகர்ப்புற பகுதிகள் 731 சதுர கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் விலக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ப்பது குறித்து பொதுமக்களின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும். 2016ஆம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத லே-அவுட்கள் மற்றும் மனைகளை முறைப்படுத்த வரும் பிப்ரவரி 29ஆம் தேதி கடைசி நாளாகும்.

2016ஆம் ஆண்டுக்கு முன் வாங்கிய மனை உரிமையாளர்கள், ஒப்புதலுக்குப் பிறகு குடிமை வசதிகளைப் பெறலாம். ஆனால், அங்கீகாரம் பெறாத மனைகளின் லேஅவுட் உரிமையாளர்கள் 10 சதவீத நிலத்தை அரசிடம் ஒப்படைத்து அனுமதி பெறலாம். சமீபத்தில் சென்னையில் 43 கோரிக்கைகளுடன் 150 ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தன்னை சந்தித்த நிலையில்  அதில் 18 கோரிக்கைகள் அரசு விதிகளின்படி வராததால் நிராகரிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் சில விதிகள் திருத்தப்பட்டு, சில மாற்றங்கள் கொண்டு வரப்படும். கட்டிடங்களின் உயரத்தை 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராக அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனுமதிக்கப்படும்.  திறந்தவெளி இருப்பு விதிமுறைகளில் எந்த தளர்வும் செய்யப்பட மாட்டாது" என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow