வெற்றி நிச்சயம்... 39 தொகுதிகள் கன்ஃபார்ம் - அண்ணாமலை நம்பிக்கை

Feb 27, 2024 - 17:07
வெற்றி நிச்சயம்... 39 தொகுதிகள் கன்ஃபார்ம் - அண்ணாமலை நம்பிக்கை

மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக ஆட்சியமைப்பார் என என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த, ஜூலை 28-ம் தேதி ராமேசுவரத்தில் தொடங்கிய பாஜகவின் என் மண் என் மக்கள் யாத்திரை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி என தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். இந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் வந்தடைந்தார். பின்னர் விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு பிரதமர் மோடி வந்தார். இதையடுத்து திறந்த வாகனத்தில் பல்லடத்தில் விழாமேடைக்கு வந்த பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, 10 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது தமிழ்நாட்டின் மாற்றம் பல்லடத்தில் நிகழ்ந்தது என்ற வரலாறு நமக்கு இருக்கும் என்றார்.  ஈரோடு மஞ்சளுக்கு ஏற்றுமதிக்கு வழிவகை செய்ததால் மஞ்சள் மாலையும், நீலகிரியின் தோடர் பழங்குடியின மக்களுக்கு பிரதமர் நிதியுதவி செய்ததால் அவர்களது தயாரிப்பில் செய்யப்பட்ட சால்வையும் ஜொலிப்பதாகக் கூறினார்.  தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஒரே ஒரு மனிதர் பிரதமர் நரேந்திர மோடி தான் எனவும் அதனால் அவருக்கு ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்கியதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

மூன்றாவது முறையாக ஆட்சியில் பிரதமர் மோடி அமரப் போகிறார் எனக்கூறிய அண்ணாமலை, பிரதமர் 450 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் நாம் வெல்ல வேண்டும் எனக் கூறினார். என் மண் என் மக்கள் யாத்திரையின் ஆரம்பம் முதல் இறுதிவரை அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அண்ணாமலை கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow