மீண்டும் சிதம்பரத்தில் போட்டியா? – திருமாவளவன் கொடுத்த அப்டேட்!

Feb 27, 2024 - 17:00
மீண்டும் சிதம்பரத்தில் போட்டியா? – திருமாவளவன் கொடுத்த அப்டேட்!

மீண்டும் சிதம்பரம் தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பி திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் எம்.பி., திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து தெரிவித்துள்ளார். அதில், ”விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துள்ளோம், விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெறும் என நம்புகிறோம். சுமூகமான முறையில் எங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்.

நான்கு தொகுதிகளை கேட்டுள்ளோம். அதில் ஒரு தொகுதி பொது தொகுதி. விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என நம்புகிறோம். ஆனால் எட்டு கட்சிகள் கூட்டணியில் உள்ளதால் அவ்வளவு தொகுதிகளை பெற முடியாது என்ற நிதர்சனத்தையும் உணர்ந்துள்ளதால் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், ”இது என்னுடைய சொந்த தொகுதி. இங்குதான் நிற்பேன். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். இந்த தொகுதியில் தான் போட்டியிட முடியும்” என திட்டவட்டமாக கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow