கோவாக்சின் செலுத்தியவர்கள் பயப்பட வேண்டாம்..! "தடுப்பூசி பாதுகாப்பானது"
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் பயப்பட வேண்டாம் என்றும், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்தது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.அந்த வகையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதில், கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. தடுப்பூசி செலுத்தியபின் பலர் திடீரென்று மரணமடைந்தது தடுப்பூசி மீதான பீதியை ஏற்படுத்தியது. இருப்பினும் கோடிக்கணக்கானோர் இந்த தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர்.
இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் மரணங்களும் மற்றும் கடுமையான காயங்களும் நிறைய பேருக்கு ஏற்பட்டு உள்ளன என புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில் இதற்கு எதிராக 51-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதனிடையே ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் அண்மையில் நீதிமன்றத்தில் அளித்துள்ள ஆவணங்களில், மிக அரிய வகையாக டி.டி.எஸ். என்ற பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தது. இந்த டி.டி.எஸ். பாதிப்பால், ரத்தம் உறைதல் ஏற்படுவதுடன், ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைவும் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
கோவிஷீல்டு தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் கூறியது, தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் மிக இளம் வயதில் திடீரென இளைஞர்கள், இளம்பெண்கள் பலர், ஜிம், திருமண விருந்து, திருவிழாக்கள் போன்ற பல்வேறு இடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது அண்மை காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பின்னரே இந்த நிலை காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது.
இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் இன்று (மே 2) தெரிவித்து உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பாதுகாப்பு எனும் ஒற்றை இலக்கை குறிக்கோளாக கொண்டு தான் கோவாக்சின் உருவாக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் 'கோவிட் 19' தடுப்பூசி திட்டத்தின் கீழ் செயல்திறன் சோதனை செய்யப்பட்ட ஒரே 'கோவிட் 19' தடுப்பூசி கோவாக்சின் மட்டும் தான். உரிமம் பெறும் வழிமுறையின் கீழ் கோவாக்சின் தடுப்பூசி 27,000 பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை முறையில், தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை நடைபெற்றது.
கோவாக்சின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மதிப்பீடு செய்யப்பட்டது. கோவாக்சின் ஆயுள் காலம் தொடர்பாக தொடர்ச்சியான பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அனுபவம் மிக்க ஆய்வாளர்கள் அடங்கிய பாரத் பயோடெக் குழுவினர் கோவிட் தடுப்பூசிகளின் ஆயுட்காலம் குறைவு என்பதை நன்கு அறிந்துள்ளனர். எனினும், இவை பயனாளிகள் உடலில் அவர்களது ஆயுள் முழுமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக எங்களது அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பு எனும் ஒற்றை நோக்கத்தை குறிக்கோளாக கொண்டே உருவாக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது.
What's Your Reaction?