"உடைமைகளை நாளை தருகிறோம்".. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கொடுத்த ஷாக்.. துபாய் பயணிகளுக்கு துயரம்..

May 2, 2024 - 21:26
"உடைமைகளை நாளை தருகிறோம்".. ஸ்பைஸ்  ஜெட் நிறுவனம் கொடுத்த ஷாக்.. துபாய் பயணிகளுக்கு துயரம்..

மதுரையில் இருந்து துபாய் சென்ற 100 பயணிகளின் உடைமைகளை நாளை அனுப்பிவைப்பதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்ததால் பயணிகள்  கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

மதுரை விமான நிலையம் மற்றும் துபாய் இடையே ஸ்பைஸ் ஜெட் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் ஏராளமான பயணிகள் மதுரையில் இருந்தும் துபாய்க்கும், துபாயில் இருந்து மதுரைக்கும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் துபாயிலிருந்து 188 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று முற்பகல் 11.10 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. தொடர்ந்து 12 மணி அளவில் மதுரை விமான நிலையத்தில் இருந்து 192 பயணிகளுடன் மீண்டும் துபாய் புறப்பட்டு சென்றது. அப்போது விமானத்தில் அதிக எடை இருந்ததால் 92 பயணிகளின் உடைமைகள் மட்டுமே விமானத்தில் ஏற்றப்பட்டது.

மேலும், 100 பயணிகளின் உடைமைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் துபாய் கொண்டு செல்லப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளின் உடமைகளை ஸ்பைஸ் ஜெட் நிறுவனமே பத்திரமாக துபாயில் அவரவர்களின் வீட்டில் கொண்டுபோய் சேர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், உடைமைகள் இல்லாமல் சென்ற பயணிகள் துபாயில் தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே பயணிகளின் உடமைகளை விரைந்து அவர்களிடம் சேர்க்க வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow