டெல்லியில் விடாது வெளுத்து வாங்கிய கனமழை.. விமான நிலைய மேற்கூரை விழுந்து ஒருவர் மரணம்.. பலர் படுகாயம்
டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கார்கள் அப்பளமாக நொறுங்கின. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழையானது இந்தியாவில் 70% மழை தேவையை பூர்த்தி செய்துவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதம் 30ம் தேதி இந்த பருவமழை தொடங்கியது. கேரளாவில் தொடங்கிய இந்த மழை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மத்திய இந்தியா வரை வந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த சில நாட்களாக டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி எடுத்தது.
வட மாநிலங்களில் பருவமழை இயல்பை விட 20% குறைவாக பெய்திருந்தது. இதுதான் வெப்ப தாக்கத்திற்கு காரணமாகும். மற்ற மாநிலங்களை விட டெல்லி வெப்ப தாக்கத்தால் கடும் சிரமங்களை எதிர்கொண்டது.டெல்லியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. தண்ணீருக்காக நாட்டின் தலைநகரம் தத்தளித்தது.
இந்த நிலையில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்லியில் மழை தொடங்கியுள்ளது. ஒரே நாளில் பெருமழை கொட்டித்தீர்த்தது. இயல்பை விட அதிகமாகவே தென்னிந்திய மாநிலங்களில் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக டெல்லியில் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருக்கிறது. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீரில் பல வாகனங்கள் மூழ்கியுள்ளன. காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேற்கு டெல்லியில் ஹரி நகர், பிகாஜி காமா பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கி வீடுகளுக்குள் புகுந்திருக்கிறது. தாழ்வான பகுதிகளில் நிற்க வைக்கப்பட்டிருந்த கார்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மொத்தமாக சராசரியாக 5.2 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. லோதி காலணியில் 9.6 மி.மீ, ரிட்ஜ் பகுதியில் 6.2 மி.மீ என பல பகுதிகளில் வேறுபட்ட அளவில் மழை பெய்திருக்கிறது. மழை காரணமாக வெப்பநிலை 4 டிகிரி வரை குறைந்திருக்கிறது.
இந்த மழை மேலும் 4 நாட்கள் வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நடந்திருக்கிறது. பயணிகளை அழைத்து செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது இந்த கூரை விழுந்ததால் கார்கள் அப்பளம் போல நொருங்கியுள்ளன. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?