+2 ரிசல்ட்.. சொன்ன தேதியில் அன்பில் மகேஷ் வெளியிடுவாரா? தேர்தல் ஆணையத்தை நாடிய பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை அமைச்சர் வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

May 3, 2024 - 06:53
+2 ரிசல்ட்.. சொன்ன தேதியில் அன்பில் மகேஷ் வெளியிடுவாரா? தேர்தல் ஆணையத்தை நாடிய பள்ளிக்கல்வித்துறை


தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், தமிழ்நாடு முழுவதும் 86 மையங்களில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தன. இந்நிலையில், முன்பே திட்டமிட்டபடி, வரும் மே 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அரசு தேர்வுத்துறை தயாராக உள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் ப்ளஸ் 2, ப்ளஸ் 1, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறார். தற்போது, லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருவதால், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நிறைவடைந்தாலும் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. எனவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அனுமதி பெற வேண்டியுள்ளது. 

இதற்காக, +2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரும் மே 6ஆம் தேதி ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவார். தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow