தாத்தாவுக்கு பாரத ரத்னா.. NDA-ல் இணைந்த RLD தலைவர் !!
இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, தனது தாத்தாவும் முன்னாள் பிரதமருமான சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவுடன் இணைவதில் பிரச்னையில்லை என தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் 26 எதிர்க்கட்சிகள் சேர்ந்து I.N.D.I.A கூட்டணி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் நெருங்கும் வேளையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறினர்.இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் I.N.D.I.A கூட்டணியின் ஒரு பகுதியாக சமாஜ்வாடி கட்சியுடன் கைகோர்த்த, ராஷ்டிரிய லோக் தளம் கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேறியது.மேற்குவங்கம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அடங்கிய ஜாட் சமூக மக்களின் ஆதரவு, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு பெரும் பலமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவரான ஜெயந்த் சவுத்ரியின் தாத்தாவும், முன்னாள் பிரதமருமான சரண் சிங்குக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது.
இதனை வரவேற்று ஜெயந்த் சவுத்ரி, டெல்லியில் தனது ஆதரவாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விருது வழங்கியமைக்காக குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். தொடர்ந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணைவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய ஜெயந்த் சவுத்ரி, இந்த நாளில் இந்த கேள்வியை எப்படி மறுக்க முடியும் எனக்கூறி NDA கூட்டணியில் இணைவதை உறுதி செய்தார். இருப்பினும் தொகுதிகள், வாக்குகளை குறித்துப் பேசினால் இன்றைய நாளின் விசேஷம் வீணாகி விடும் எனவும் அவர் கூறினார்.
What's Your Reaction?