2029-ல் பாஜகவின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுப்போம்..சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி...

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தோல்வியை தழுவும் பட்சத்தில், 2029-ல் பாஜக பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுத்து விடுவோம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Feb 17, 2024 - 17:48
2029-ல் பாஜகவின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுப்போம்..சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி...

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. பல கட்சியை சேர்ந்தவர்கள், பாஜகவில் தங்களை இணைத்து வரும் நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்க பேரம் பேசுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இருவரிடம் பாஜகவினர் ரூ.25 கோடி வரை பேரம் பேசியதாகவும், எம்.எல்.ஏக்கள் அனைவரும் தன்னுடன் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியதாகவும், விளக்கம் அளித்தார். 

தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மிக்கு 54 ஆதரவு வாக்குகளும், ஒரு வாக்கு எதிராகவும் பதிவாகியது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. இருப்பினும் ஆம் ஆத்மியை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வருகை தரவில்லை. வருகை தராதவர்களில் இருவருக்கு உடல்நிலை சரியில்லை. 3 பேர் சொந்த காரணங்களுக்காக அவைக்கு வரவில்லை. 2 பேர் சிறையில் இருப்பதாக விளக்கம் அளித்த கெஜ்ரிவால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை தழுவும் பட்சத்தில் 2029-ல் பாஜகவின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுப்போம் என உறுதிபட கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow