தேச விரோதி திமுக.. போதைப்பொருட்களை இந்த தேசத்தை விட்டே விரட்டுவேன்.. நெல்லையில் கர்ஜித்த மோடி

போதை வணிகத்தோடு நான் போராடி இந்த தேசத்தை விட்டே விரட்டுவேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இளம் தலைமுறையினரை போதை இல்லாத மக்களாக உருவாக்க பாடுபடுவேன் என்றும் திருநெல்வேலியில் பேசிய பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Apr 15, 2024 - 18:02
தேச விரோதி திமுக.. போதைப்பொருட்களை இந்த தேசத்தை விட்டே விரட்டுவேன்.. நெல்லையில் கர்ஜித்த மோடி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
திமுக காங்கிரஸ் இணைந்த இந்தியா கூட்டணி பல தேச விரோத செயல்களை செய்துள்ளது. கச்சத்தீவை நம்மிடம் இருந்து துண்டித்து வேறு நாட்டிற்கு கொடுத்தனர். திரைமறைவில் செய்த பாவத்தை யாரும் மன்னிக்க முடியாது. மீனவர்களுக்கு திமுக காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்து விட்டது. திரைமறைவில் ரகசியமாக தாரை வார்த்ததை பாஜக அம்பலப்படுத்தியது. இது அவர்கள் செய்த தேச துரோகம் என்று குற்றம் சாட்டினார். 

இன்றைக்கு தமிழ்நாடு போதையின் பாதையில் செல்கிறது. போதைப்பொருள் என்னும் விஷம் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி பெற்றோர்கள் கவலைப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதிகாரம் மிக்கவர்களின் அனுமதியோடு போதைப்பொருள் தலைவிரித்தாடுகிறது. போதை மாஃபியாக்களை திமுகவினர் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றனர். போதை வணிகத்தோடு போராடுவேன். அதை இந்த தேசத்தை விட்டே விரட்டுவேன். இளம் தலைமுறையினரை போதை இல்லாத மக்களாக உருவாக்க பாடுபடுவேன் என்றார் பிரதமர் மோடி.

இந்த தேர்தல் பிரசார கூட்டம்தான் கடைசி பிரசார கூட்டம். இனி உங்களை வந்து சந்திக்க முடியாது காரணம் வரும் 19ஆம் தேதியன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நீங்கள் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை தந்து கொண்டிருக்கிறீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி, பாஜக தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்டனர். அவர்கள் முகத்தில் கரி பூசுவது போல நீங்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி.

தமிழ்நாட்டில் பாஜக வந்தால் இந்தி வந்து விடும் என்று ஒரே பல்லவியை தேய்ந்து போன ரெக்கார்டு போல பேசுகின்றனர். தமிழ்நாட்டில் வசிக்கும் முதல் தலைமுறை வாக்காளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எத்தனையோ கட்சிகளுக்கு வாக்களித்திருப்பீர்கள். இந்த முறை ஒருமுறை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.

ஒரு நாளில் 24 மணி நேரமும் என்னுடைய சிந்தனை 2047 என்பதுதான். உங்களின் அன்பும் ஆதரவு எனக்கு உற்சாகத்தை தருகிறது. இதை கேட்கும் போது தேர்தல் பிரசார கூட்டமாக தெரியவில்லை. வெற்றி கூட்டமாக தெரிகிறது என்று உற்சாகத்துடன் தெரிவித்தார் மோடி. வரும் 19ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. பாஜக உங்கள் நம்பிக்கையை பெற்றுள்ளது. இங்குள்ள ஆளுங்கட்சிக்கு இது பயத்தை கொடுக்கிறது. பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை திமுக தடுக்க ஆரம்பித்து விட்டது என்று குற்றம் சாட்டினார்.

நீங்கள் பயப்பட வேண்டாம். நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் துணிச்சலுடன் பாஜகவிற்கு பிரசாரம் செய்யுங்கள் என்று கூறிய மோடி பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவர்கள் அனைவரும் டெல்லியில் உங்கள் குரலை எதிரொலிப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். உங்கள் மொபைல் போனை எடுத்து நீங்கள் வெளிச்சம் காட்டுங்கள். டெல்லியில் இருட்டறையில் இருக்கும் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இந்த வெளிச்சம் பரவட்டும் என்றும் பிரதமர் மோடி சொன்ன உடன் அனைவரும் உற்சாகமாக செல்போன் டார்ச் அடித்து மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow