பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வெறும் காகிதப்பூ.. அது மலர் ஆகாது... ஜெயக்குமார் கடும் தாக்கு
பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வெறும் காகிதப்பூ என்றைக்கும் அது மலர் ஆகாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
வடசென்னை தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீதி வீதியாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது திமுக, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தயாநிதி மாறன் 40 தொகுதிகள் வெற்றி அடைவோம் என்று கூறியுள்ளார். அவர் வீட்டில் ஸ்லைட் வைத்து 40 /40 என எழுதி பார்த்துக்கொள்ளட்டும் என்று நக்கலாகப் பேசினார். அதிமுகவை பிரித்தது பாஜக தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு பதில் அளித்த அவர், காமாலை காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகத் தான் தெரியும், முதலமைச்சர் கண்ணில் தான் கோளாறு என்று விமர்சனம் செய்தார்.
ஓபிஎஸ், டிடிவி, தினகரன் குறித்துப் பேசிய ஜெயக்குமார், பாஜகவின் தமிழக தலைவராக ஓபிஎஸ் இருப்பார் அதன் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இருப்பார் அண்ணாமலை காணாமல் போய்விடுவார் என்றார்.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு கட்டாயம் உரிமைத் தொகை கிடைக்கும் என்று சொன்னது குறித்து கேட்டபோது, ஓட்டுக்காக வீணாக மக்களிடம் ஆசை வார்த்தை காட்டுவதாகவும், பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக கூறினார்கள், கேஸ் மானியம் கொடுப்பதாக கூறினார்கள் கொடுத்து விட்டார்களா என்று கேள்வி எழுப்பினார். இது மக்களை ஏமாற்றும் வாக்குறுதி என்று படார் என்று பதிலளித்தார். பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்துப் பேசிய அவர், காகித பூ என்றைக்கும் மலர் ஆகாது என அவர் விமர்சனம் செய்தார்.
What's Your Reaction?