கெஜ்ரிவால் கைது I.N.D.I.A கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது - மு.க.ஸ்டாலின்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது போன்ற பாஜக அரசின் நடவடிக்கைகள், I.N.D.I.A கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது போன்ற பாஜக அரசின் நடவடிக்கைகள், I.N.D.I.A கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டாலும், இலாகா இல்லாத முதலமைச்சராக, சிறையில் இருந்தபடியே ஆட்சி செய்வார் என ஆம் ஆத்மி அமைச்சர் அடிஷி கூறியுள்ளார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை கண்டித்து X தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாசிச பாஜக அரசு தோல்வி பயம் காரணமாக கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது என தெரிவித்துள்ளார். பாஜக அரசு செய்தது வெறுக்கத்தக்க செயல் எனவும், பாஜகவில் இருக்கும் ஒரு தலைவராவது இதுவரை கைது செய்யப்பட்டார்களா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜக அரசு தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் எனக்கூறிய அவர், எதிர்கட்சித் தலைவர்களை பாஜக தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், பாஜக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களை தூண்டுவதுடன், பாஜகவின் உண்மையான முகத்தை தோலுறிக்கிறது எனவும் இதனால் I.N.D.I.A கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?