வெறிச்சோடி கிடக்கும் புதிய மீன் அங்காடி... வியாபாரம் செய்ய ஆர்வம் காட்டாத மீன் வியாபாரிகள்! 

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள புதிய நவீன மீன் அங்காடி இன்று முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அங்கு வியாபாரம் செய்ய மீன் வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

Oct 7, 2024 - 09:32
வெறிச்சோடி கிடக்கும் புதிய மீன் அங்காடி... வியாபாரம் செய்ய ஆர்வம் காட்டாத மீன் வியாபாரிகள்! 

சென்னை மெரீனா கடற்கரையை அடுத்த பட்டினப்பாக்கம் லூப் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்டோா் மீன் வியாபாரம் செய்து வருகின்றனா். லூப் சாலையில் ஏராளமான மீனவர்கள் மீன் வியாபாரம் செய்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதே பகுதியில் ரூ.9.97 கோடி மதிப்பில் நவீன மீன் விற்பனை அங்காடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தாா்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள நவீன மீன் விற்பனை அங்காடியில் 366 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மீன் அங்காடி திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில் இந்த மீன் அங்காடியில் விற்பனையாளா்களுக்கு கடைகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த அங்காடி பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இன்நிலையில் தற்போது கடைகள் ஒதுக்கும் பணி முடிவடைந்துள்ளது. 

சென்னை விமான சாகச நிகழ்ச்சி நிறைவடைந்த பின், பட்டினப்பாக்கம் லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் அங்காடி செயல்பாட்டுக்கு வரும் எனவும் அதன்பின், லூப் சாலை முழுவதும் சாலையோர கடைகள் மீன் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்திருந்த நிலையில் இன்று முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதோடு, லூப் சாலையில் சாலையோர கடைகளின் மீன்களை விற்பனை செய்வதற்க்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது அதேசமயம், புதிதாக அமைக்கப்பட்ட மீன் அங்காடியில் வியாபாரம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை மீனவா்கள் செய்து வருகின்றனா்..

இந்த நிலையில், இந்த புதிய நவீன மீன் அங்காடியில் வியாபாரம் செய்ய மீன் வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

இது குறித்து மீன் வியாபாரிகளிடம் கேட்டபோது, ”நாங்கள் 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீன் வியாபாரம் செய்து வருகின்றோம். தற்பொழுது இந்த நவீன மீன் அங்காடிக்கு கடைகளை மாற்றம் பட்ச்சத்தில் பெரிய அளவில் வியாபாரத்தில் லாபம் எடுக்க முடியாது. அதோடு, குறிப்பிட்ட வியாபாரிகளுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மீன் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், மீன் அங்காடியில்  ஒதுக்கிய கடைகள் மிகவும் சிறிய அளவில் இருப்பதாகவும், அங்கே அதிகப்படியான மீன்களை வைத்து விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

”பட்டினப்பாக்கம் லூப் சாலையின் ஓரம் மீன்களை வியாபாரம் செய்தால் வரக்கூடிய பொதுமக்கள் ஆர்வமாக மீன்களை வாங்குவார்கள்.  ஆனால் மீன் அங்காடியில் மீன்களை விற்பனை செய்யும் பட்சத்தில், பொதுமக்கள் அங்கு வந்து மீன்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள். 80% மீனவர்கள் சாலையோரத்தில் மீன்களை வியாபாரம் செய்யவே விரும்புகின்றனர். மீன் அங்காடிக்கு கடைகள் மாற்றப்படும் பட்சத்தில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும்” என மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow