சொத்து தகராறு.. துப்பாக்கியை தூக்கிய பங்காளி... பதுங்கியவரை பட்டி பார்த்து தூக்கிய திருப்பத்தூர் போலீஸ்
திருப்பத்தூர் அருகே, சொத்துத் தகராறு காரணமாக பெரியப்பா மகனை துப்பாக்கியால் சுட்ட தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள புதூர்நாடு வலதலப்பட்டு பகுதியைச் சேர்ந்த 60 வயதான காளி என்பவருக்கும், அவருடைய சித்தப்பா மகன் சம்பத் என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக சொத்து பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சம்பத், தனது நாட்டுத் துப்பாக்கியை எடுத்து காளியின் நெஞ்சிலேயே சுட்டுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ரத்த வெள்ளத்தில் சரிந்த காளியை 108 ஆம்புலன்சை வரவழைத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் காளியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய போலீசார், தலைமறைவாக இருந்த சித்தப்பா மகன் சம்பத்தை கைது செய்து, அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். துப்பாக்கி வைத்திருந்தது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?