திமுக ஆட்சியால் திருப்பூரில் வியாபாரம் பாதிப்பு-பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்
திமுக ஆட்சியில் அந்த நிறுவனங்கள் அதிக அளவில் மூடப்பட்டுள்ளதாக சாடினார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், திமுக ஆட்சியில் நிறுவனங்கள் வியாபாரம் இன்றி மூடப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
திருப்பூரில் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர், திருப்பூரில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளதாகக் குற்றம்சாட்டினார். வீட்டு வாடகை, மின்கட்டணம் கட்ட முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருவதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறைகூறினார்.
அதிமுக ஆட்சியில் சிறு, குறு வணிக நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறிய அவர், தற்போது திமுக ஆட்சியில் அந்த நிறுவனங்கள் அதிக அளவில் மூடப்பட்டுள்ளதாக சாடினார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு சரியான பாடம் புகட்ட, எடப்பாடி பழனிசாமி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக தொண்டர்களை வலியுறுத்தினார்.
What's Your Reaction?