விளவங்கோடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் - விஜயதரணி ராஜினாமா கடிதம்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள, விஜயதரணி தமது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தமது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அவர் அனுப்பியிருக்கிறார்.
குமரி மாவட்டம் விளவங்கோடு எம்.எல்.ஏ.வாகவும், சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்த விஜயதரணி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த்துக்கு அத்தொகுதியை வழங்கியது கட்சி மேலிடம். இதனால், காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி. மேலும், கட்சிக்குள் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதனால், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று (பிப்.24-ம் தேதி) டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு-க்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தமது எம்.எல்.ஏ பதிவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி கடிதம் எழுதி, சபாநாயகர் அப்பாவு-க்கு அனுப்பியிருக்கிறார்.
இதனால், விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, விரைவில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுடனேயே இடைத்தேர்தலும் நடத்தப்படலாம் என்றும் பேசப்படுகிறது.
What's Your Reaction?