குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது - முதலமைச்சர்!!

இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Mar 12, 2024 - 14:45
Mar 12, 2024 - 16:00
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது - முதலமைச்சர்!!

இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான  குடியுரிமை திருத்த சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசால் கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம், திங்கட்கிழமை(11.03.2024) முதல் அமலுக்கு வந்தது. மேலும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இன்று முதல் இணையதளமும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ”மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பாஜக அரசு இந்த சட்டத்தை பெரும் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான இந்த சட்டம் நாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது. அதன் காரணமாகவே கடந்த 2021, ஆண்டு தமிழக அரசு சட்டப்பேரவையில் இந்த சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தேர்தல் அரசியலுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டம் தமிழகத்தில் நிறைவேற்ற அரசு அனுமதிக்காது”எனத் தெரிவித்துள்ளார். குடியுரிமை விவகாரம் மத்திய உள்துறைக்குக் கீழ் வரும் நிலையில், மாநில அரசின் இந்த நிலைப்பாடு கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்யும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow