மையம் கொண்ட 'கச்சத்தீவு' புயல்.. பரபரக்கும் தேர்தல் களம்.. "உண்மையை அறியும் நேரம் இது"

கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் திமுக, அப்போதைய காங்கிரஸ் அரசுக்கும், இலங்கைக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முக்கிய அங்கம் வகித்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

Apr 5, 2024 - 08:24
மையம் கொண்ட 'கச்சத்தீவு' புயல்.. பரபரக்கும் தேர்தல் களம்.. "உண்மையை அறியும் நேரம் இது"

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கச்சத்தீவை மீட்டு, மத்திய - மாநில அரசுகள் இதற்கு நிரந்திர தீர்வு காண வேண்டுமென மீனவர்களின் பல்லாண்டு கால கோரிக்கையாக இருக்கிறது. தற்போது இந்த விவகாரம் மக்களவை தேர்தல் களத்திலும் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.  

பிரசாரத்தின் சூடு ஒவ்வொரு நாளும் உச்ச கட்டத்தை எட்டிவரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியும், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதில் காங்கிரசும், திமுகவும் ஒரு பகுதியாக இருந்தன என்று குற்றம்சாட்டினார். 

இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமான ஒன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். உண்மையில் அப்போதைய மாநில அரசாக இருந்த திமுகவிடம் ஆலோசனை நடத்திய பிறகே கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாக மீண்டும் திட்டவட்டமாக அவர் கூறியிருக்கிறார்.  ஆனால் இதை ரகசியமாக வைத்திருக்கும் திமுக, நாடாளுமன்றத்திலும், வெளியிலும் நடந்த விவாதங்களின் போது, இந்த விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

1973-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் தனிப்பட்ட முறையில் விரிவான ஆலோசனை நடத்தியது தொடர்பான ஆவணங்கள் இருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். இதனால், இந்த விவகாரத்தில் மக்கள் உண்மையை தெரித்துக் கொள்வது மிக முக்கியமானது என்றும், இது திமுகவிற்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்றும் ஜெய்சங்கர் திட்டவட்டமாக மீண்டும் கூறியிருக்கிறார்.

இந்த கச்சத்தீவு விவகாரம் 70 ஆண்டுகளுக்கு பின்னர், இப்போது தமிழக அரசியலில் பெரும் புயலாக மையம் கொண்டு இருக்கிறது. கச்சத்தீவை எப்படியும் மீட்டே தீருவோம் என்று பாஜக பிரசாரம் செய்து வருகிறது. தமிழக அரசியல் களத்தில் இந்த பிரசாரம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow