அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு... சத்யபிரதா சாகு கூறியது என்ன?

மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு

Mar 27, 2024 - 14:32
அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு... சத்யபிரதா சாகு கூறியது என்ன?

பிரதமர் நரேந்திர மோடியை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் அவகாசம் நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இறுதி வாக்காளர் பட்டியலின்படி 3 கோடியே 6 லட்சம் ஆண்கள்,3 கோடியே 16 லட்சம் பெண்கள், 8 ஆயிரத்து 465 மாற்று பாலினத்தவர்கள் உள்ளிட்டு 6 கோடியே 23 லட்சம் பேர் தமிழ்நாட்டில் வாக்களிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார். அதில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6 லட்சத்து 13 ஆயிரம் பேர் உள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் 68,144 வாக்கு மையங்கள் உள்ள சூழலில், கூடுதலாக 177 வாக்குச்சாவடிகளை அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 39 பொதுப் பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் பணியில் 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 7 லட்சம் பணியாளர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பணிக்கான பயிற்சி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 7ம் தேதி அனைத்து தேர்வுகளும் நிறைவடையும் எனவும் சத்யபிரதா சாகு குறிப்பிட்டார். வருமான வரித்துறை சார்பில் இதுவரை ரூ.6.51 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்கள் கொடுக்கலாம் எனவும் 45,000 வெப் கேமராக்கள் வாக்குப்பதிவு  மையங்களில் வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் அமைச்சர் அனிதா ராராகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் காமராஜரை கொல்ல நினைத்த பாவி எனக்கூறி மேலும் சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். தொடர்ந்து பாஜக அளித்த புகாரின் பேரில், மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow