திமுகவை விடாமல் துரத்தும் எடப்பாடி... சென்னையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அவர்கள் அனுமதி கேட்ட நிலையில், எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னையில் அதிமுக உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 62 பேர் பலியாகி விட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதற்கிடையே தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 20ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
சட்டப்பேரவையின் தொடக்க நாளில் கள்ளக்குறிச்சி விவாகரத்துக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக கறுப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள், உடனடியாக கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவின்பேரில், அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவை நடக்கும் நாளில் எல்லாம் அதிமுக உறுப்பினர்கள் வந்து அமளியில் ஈடுபடுவதும் சபாநாயகர் அவர்களை வெளியேற்றுவதும் தொடர்ந்தது.
இந்நிலையில், இன்றும் கறுப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என தொடர் அமளியில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையின் மாண்பை சீர்குலைத்ததாக கூறி நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதிமுகவினர் வேண்டுமென்றே வீண் விளம்பரம் தேடுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னையில் நாளை அதிமுக உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அவர்கள் அனுமதி கேட்ட நிலையில், எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் மறுக்கப்பட்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு விரோதமானது!
எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மடைமாற்ற அரசியலால் கடந்துவிட முயற்சிக்கும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனம்.எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் எனது தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம்!
கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்'' என்று கூறியுள்ளார். ஆனால் அதிமுக போராட்டத்துக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காலை 9 மணி முதல் 5 மணி வரை மட்டுமே உண்ணாவிரத போராட்டம் நடைபெற வேண்டும்.
சாலையில் போராட்டம் நடத்தக்கூடாது, காவல்துறை அனுமதித்த இடத்தில் மட்டும் போராட்டம் நடத்த வேண்டும். காவல்துறை உத்தரவை மீறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?